திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்து வந்ததாக எழுந்த புகாரையடுத்து, பானி பூரி தயரித்து வந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தேவதானம் பகுதியில், வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 20 பேர், ஒரு வீட்டை எடுத்து குடோன் போல் அமைத்துள்ளனர். பின்னர் அந்த குடோனில், பானி பூரி தயாரித்து, மற்ற பானி பூரி வியாபாரிகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த குடோனில் சுகாதாரமற்ற முறையில் பானி பூரிகள் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இதையடுத்து அந்த குடோனுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா தலைமையிலான குழு, பானி பூரி தயாரிக்கும் குடோனை சோதனையிட்டனர். அப்போது பானி பூரி தயாரிப்பதற்கு தேவையான உருளைக் கிழங்குகள் அழுகிய நிலையில் இருந்தன. மேலும் வண்டுக்கள் நிறைந்த மைதா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக பானி பூரி தயாரிக்கும் குடோனிற்கு, அதிகாரிகள் சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.