பாம்பன் பாலம் : 10 நாளுல 2வது தடவ.. நேருக்கு நேரா வந்த பேருந்துகள்.. அடுத்த செகண்டுல நடந்த துயரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் காயமடைந்த 20 பேர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.
பாம்பன் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக இரண்டு பேருந்துகளின் ஓட்டுனர்கள் உட்பட 20 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாலத்தில் விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் இடையூறாக நின்றதால் மற்ற பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இருபுறத்திலும் நீண்ட வரிசையில் நின்றன.இதனையடுத்து போக்குவரத்தை சரிசெய்ய, அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
விபத்து
பாம்பன் பகுதியில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலத்தில் செல்லும் பேருந்துகள் வழக்கத்தை விட குறைவான வேகத்திலேயே சென்றுகொண்டிருக்கின்றன. இதனிடையே, மழையின் காரணமாக பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் பாம்பன் பாலத்தில் சென்னையில் இருந்து வந்த தனியார் பேருந்தும் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் வாகனம், பாம்பன் பாலத்தில் இருந்த தடுப்புச் சுவற்றின் மீது மோதியது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஓடிச் சென்று பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனர். இந்நிலையில், மீண்டும் பாம்பன் பாலத்தில் விபத்து ஏற்பட்டிருப்பது அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்