பாம்பன் பாலத்தில் திக் திக்.. நேருக்குநேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. நூலிழையில் போராடிய பயணிகள்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் பாலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Also Read | வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்த மனைவி.. நடுராத்திரி கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!
பாம்பன் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சென்னையில் இருந்து வந்த தனியார் பேருந்தும் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் வாகனம், பாம்பன் பாலத்தில் இருந்த தடுப்புச் சுவற்றின் மீது மோதியது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஓடிச் சென்று பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டிருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற தனியார் பேருந்து முன்னர் சென்ற பேருந்தை முந்திச் செல்லும்போது, எதிரே வந்த அரசு பேருந்தில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரண்டு பேருந்துகளும் மோசமாக சேதமடைந்துள்ளன. மோதலின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பாலத்தில் இருந்த நடைமேடையில் ஏறி, அங்கிருந்த பக்கவாட்டு தடுப்புச் சுவர் மீது மோதி நின்றிருக்கிறது. நல்வாய்ப்பாக அப்போது பேருந்து நின்று விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
உதவிய மீனவர்கள்
இதனிடையே தனியார் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியதால் அதன் ஓட்டுநர் உள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனை கண்ட பாம்பன் பாலத்தில் நின்றுகொண்டிருந்த மீனவர்கள் ஓடிச் சென்று கயறு கட்டி அவரை மீட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பாம்பன் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை காண ஏராளமான பொதுமக்கள் ராமேஸ்வரம் செல்வது உண்டு. அப்படி சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பாம்பன் பாலத்தில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்