"குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம் – ஓர் அடிப்படை உரிமை" : இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணையவழிக் கருத்தரங்கம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

"குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம்  – ஓர் அடிப்படை உரிமை" என்ற தலைப்பில் இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன், ஜூலை மாதம் 11ம் நாள் காலை 11 மணி முதல் மதியம் 12.30 வரை இணையவழிக் கருத்தரங்கை ஒருங்கிணைத்தது.

"குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம் – ஓர் அடிப்படை உரிமை" : இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணையவழிக் கருத்தரங்கம்

இக்கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளராக மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு. P. சதாசிவம் அவர்கள் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களிடம் உரையாற்றினார்.

குறைந்தபட்ச கூலி மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசிய அவர், "குறைந்தபட்ச கூலிக்கு மேல் அளிக்கப்படும் எந்தவொரு கூலியும்  உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு குறைவாக இருந்தால்  அது தொழிலாளர் பிரச்னை. ஆனால், அதுவே அரசு நிர்ணயித்த  குறைந்தபட்ச கூலியைவிட குறைவாகக் கூலி வழங்கப்பட்டால் அது அடிப்படை உரிமை மீறல் பிரச்னை. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 மற்றும் 23ன் படி குறைந்தபட்ச கூலி என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்று. குறைந்தபட்ச கூலியை வழங்காமல் இருப்பது சட்டத்திற்குப் புறம்பான குற்றமாகும். மத்திய மாநில அரசுகளுக்கு அரசியல் அமைப்பு ரீதியான பொறுப்பும், முதலாளிக்கு சட்ட ரீதியிலான பொறுப்பும் இருக்கிறது. முதலாளி குறைந்தபட்ச கூலி வழங்காமல் இருப்பது அல்லது காலம் தாழ்த்துவது மனிதத் தன்மையற்றது மட்டுமில்லாமல் ஒழுக்கக்கேடான செயலாகும். இவ்வகையான செயல்பாடுகள் முதலாளியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டார்.

டாக்டர். கேர்ரி பிம்பர்டன் ஃபோர்டு,  நிர்வாக இயக்குநர்  மற்றும்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மனிதக் கடத்தல் குறித்த ஆராய்ச்சி மைய நிறுவனர், அவர்கள் குறைந்தபட்ச ஊதியத்திற்கான உத்தரவாதம் அளித்தல் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிலை குறித்து உரையாற்றினார்.

டாக்டர். ஷாந்தனு தத்தா, சிந்தனைத் தலைமை மூத்த நிபுணர், இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அவர்கள் இந்தியாவின் பொருளாதார மீட்சியில் குறைந்தபட்ச கூலியின் தாக்கம் குறித்துப் பேசினார்.

திருமதி. மெர்லின் ஃப்ரீடா, செயல் இயக்குநர், இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் சென்னை, அவர்கள் இந்த இணையவழிக் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.

இக்கருத்தரங்கில் மாண்புமிகு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை மற்றும்  காவல்துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசு சாரா தொண்டு அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கலந்துகொண்டனர்.

பங்குபெற்றவர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டது மட்டுமின்றி, காலத்தின் தேவைக்கேற்ப ஒருங்கிணைக்கப்பட்ட "குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம் - ஓர் அடிப்படை உரிமை" என்ற கருத்தரங்கை ஒருங்கிணைத்தமைக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

 

மற்ற செய்திகள்