ஆன்லைன் ‘ரம்மி’ விளையாட்டுக்கு தடை.. மீறி விளையாடினால் ‘சிறை’.. தமிழக அரசு அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கி இளைஞர்கள் பலர் தற்கொலை செய்தனர். இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு கடந்த 18ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அதிக முக்கியத்துவத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்று விளக்கமளித்தார். இதனை அடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளால் உயிர்கள் பறிபோவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்றும் அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்