16 வயது பள்ளி சிறுவனால்... 'மூதாட்டி'க்கு நேர்ந்த கொடூரம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மூதாட்டி ஒருவர் மர்மமாக உயிரிழந்த வழக்கில் பள்ளிச் சிறுவர் ஒருவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 30-ம் தேதி இரவு, தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மூதாட்டியின் உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், கடந்த 4-ம் தேதி மூதாட்டி பொன்னம்மாள் உயிரிழந்தார்.
இதனால், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர். அப்போது மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 16 வயது சிறுவன் தான் இந்த கொலையை செய்தது என தெரியவந்தது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பொதுவாக, மூதாட்டியின் வீட்டு தோட்டத்தில் விளையும் பழங்களை காசு கொடுத்து வாங்கி செல்வது வழக்கம். அதேபோல், அந்த சிறுவனும் வெளிநாட்டு பணத்தை கொடுத்து மூதாட்டியிடம் பழங்கள் வாங்கியுள்ளான்.
அந்தப் பணம் செல்லாது என தெரிந்ததும், மூதாட்டி பொன்னம்மாளுக்கும், சிறுவனுக்கும் பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னிடம் இருந்த பணத்தை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, வீட்டில் செலவுக்கு பணம் கேட்டபோது, சிறுவனின் தாய் தர மறுத்துள்ளார். அப்போது மூதாட்டி அதிக பணம் வைத்திருந்ததை பார்த்த சிறுவன், செலவுக்காக மூதாட்டியின் வீட்டில் திருட முயற்சித்துள்ளார். இதனைத் தடுக்க முயற்சித்த மூதாட்டியை, அருகில் இருந்த டார்ச் லைட்டால் தாக்கிவிட்டு, அங்கிருந்த செல்ஃபோன் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு சிறுவன் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிறுவன் தாக்கியதில் நிலைகுலைந்த மூதாட்டி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். கடைசியில் செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில், சிறுவனின் தாய், அந்த செல்ஃபோனை பயன்படுத்தி வந்தது தெரியவந்ததை அடுத்து, சிறுவனிடம் விசாரணை செய்த பின்பு இந்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த சிறுவன் கைதுசெய்யப்பட்டு, கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.