‘100 ரூபாயை எடுக்கப்போய் 1 லட்சத்தை பறிகொடுத்த முதியவர்’.. சென்னையில் அரங்கேறிய நூதன கொள்ளை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நூதன முறையில் முதியவரை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதாவரம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பணியாற்றி வந்த தனியார் நிறுவனத்தில் இருந்து வரவேண்டிய செட்டில்மெண்ட் தொகை சமீபத்தில் அவரது வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாயை சீனிவாசன் எடுத்துள்ளார்.
பின்னர் பணத்தை இருசக்கர வாகனத்தின் டேங்கர் கவரில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது இவரை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் இருவர் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சீனிவாசனின் சட்டைப்பையில் இருந்து 100 ரூபாய் பறந்து சென்றதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய சீனிவாசன் வண்டியில் இருந்த பணத்தை மறந்துவிட்டு 100 ரூபாயை எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர்கள் வண்டியில் இருந்த 1 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். 100 ரூபாய் கிடைக்காமல் திரும்பி வந்த சீனிவாசன் வண்டில் இருந்த பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.