'மனைவி' இறந்தது தெரியாமல் 'சடலத்திற்கு' பணிவிடை செய்து 'பராமரித்து' வந்த 'முதியவர்!'.. மதுரையில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மனைவி இறந்தது தெரியாமல், முதியவர் ஒருவர் மனைவியின் சடலத்துடன் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

'மனைவி' இறந்தது தெரியாமல் 'சடலத்திற்கு' பணிவிடை செய்து 'பராமரித்து' வந்த 'முதியவர்!'.. மதுரையில் நடந்த சோகம்!

திருமங்கலத்தை அடுத்த செங்குளம் பகுதியில் ஏழாவது தெருவை சேர்ந்தவர் பாண்டி. 90 வயதான இவருடன் 85 வயதில் ஆண்டாள் என்கிற இவருடைய மனைவி இருந்த நிலையில், இவர்களின் மகன்கள், மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி கோவையிலும், தேனி மாவட்டத்திலும் வசித்து வரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆண்டாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானதாக தெரிகிறது.

அவரை அருகில் இருந்து கவனித்து வந்துள்ளார் பாண்டி. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாண்டிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவையில் உள்ள மகளுக்கு பாண்டி தகவல் தெரிவிக்க, தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதனால் கோவையில் இருந்து அவரது மகள் வர முடியாத நிலை உண்டானது. எனினும் பாண்டியின் மகள், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையத்திற்கு அழைத்து தனது பெற்றோருக்கு உணவளிக்க கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட முதியோர்களுக்கு உணவளிக்க திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்பேரில் திருமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன், முதியவர்கள் இருக்கும் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு உணவை எடுத்துக் கொடுக்கச் சென்றார்.

ஆனால், பாண்டிக்கு உணவு கொடுத்து விட்டு அவரது மனைவிக்கு உனக்கு உணவு கொடுக்கப் போகும் போதுதான் படுத்த படுக்கையில் பாண்டியின் மனைவி ஆண்டாள் இறந்து கிடந்தது அனைவருக்கும் தெரியவந்தது. அதன்பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாட்சியர் சௌந்தர்யா, வட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தவிர உடல்நலமின்றி இருந்த முதியோரும் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.