‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’! டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்..! பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க பேசிய பணத்தை தரக்கோரி முதியவர் மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள செலவடை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பவர் கிரிட் நிறுவனம் உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்துள்ளது. அதற்காக மின்கோபுரம் அமைந்துள்ள இடத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் முன்பணமாக 5 லட்சம் ரூபாயை முதியவருக்கு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் மின்கோபுரம் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதால் பாக்கி பணத்தை பவர் கிரிட் அதிகாரிகளிடம் முதியவர் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர் கிருஷ்ணன் இன்று சுருக்கு கயிறுடன் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் முதியவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பவர் கிரிட் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். விரைந்து வந்த அதிகாரிகள் பாக்கி பணத்தை விரைவில் தருவதாக கூறியதை அடுத்து முதியவர் சமாதானம் அடைந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.