துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனம் உதகை அருகே, ஒரு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதால் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மக்களவைத் தேர்தலுக்காக, அதிரடியான பிரச்சாரத்தில் அதிமுக தலைவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கென வருகிற மக்களவைத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் நிற்கவுள்ள நீலகிரி அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக பேசி, வாக்கு சேகரிக்கவென துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு உதகை சென்றிருந்தார்.
மேலும், அடுத்த நாளுக்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், உதகையில் உள்ள சுலைவன் கோர்ட் ஹோட்டலில் துணை முதல்வர் தங்கி ஓய்வெடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இதனையடுத்து இன்று (ஏப்ரல் 04) காலை மக்களவை தேர்தலில் நிற்கும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்குச் சென்றுள்ளார்.
இந்த சூழலில்தான், ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனம் நடவட்டம் பகுதியை தாண்டும்பொழுது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் அந்த பிரச்சார வாகனத்தில் இருந்த யாருக்கும் அதிர்ஷ்டவசமாக ஒன்றும் ஆகவில்லை என்பதும், குறிப்பாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விபத்து நிகழ்ந்த சமயத்தில் இல்லை அந்த வாகனத்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது.