'கோவில்களில் சாமி தரிசனம்'... 'உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்'... பரபரப்பான அரசியல் களம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முருகன் மற்றும் அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததால் முக்கிய முடிவை அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் விவாதம் அனல் பறந்ததாகத் தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் சசிகலாவும் சிறையில் வர இருப்பதால் தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பிற்குச் சென்றுள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாகக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக தங்களை முன்னிறுத்திக் கொள்வதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வதிற்கிடையே பெரும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்று மாலை 6 மணிக்குத் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
வரும் வழியில் பெரியபாளையம் அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார். பொதுவாக, எந்த முக்கிய முடிவையும் எடுத்து அறிவிப்பதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம், முருகன் கோவிலுக்கும், அம்மன் கோவிலுக்கும் செல்வது வழக்கம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் முக்கிய முடிவை எடுத்து அதை அறிவிக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
மற்ற செய்திகள்