'கணவனை 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய மனைவி' ... 'நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணவனை அடித்து கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி, காரில் வைத்து எரிக்க முயன்ற மனைவியின் செயல் பலரையும் அதிரவைத்துள்ளது.

'கணவனை 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய மனைவி' ... 'நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்'!

கடலூர் மாவட்டம் வானதிராயபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு நித்யா, நிவேதா என்ற 2 மகள்களும், பிரபு வெங்கடேசன் என்ற மகனும் உள்ளனர். பழனிவேல் நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்துடன் அவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பழனிவேல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மஞ்சுளா, அவரின் தம்பி ராமலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து இரும்பு கம்பியால் பழனிவேலின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பழனிவேலின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் வைத்து கட்டி, பழனிவேலுக்கு சொந்தமான காரில் போட்டுக் கொண்டு சின்னசேலம் அருகே உள்ள வி.கிருஷ்ணாபுரம் காப்புக்காடு பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பழனிவேல் விபத்தில் இறந்தது போல சித்தரிப்பதற்காக, அவரது உடலை காரில் போட்டுவிட்டு காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனிடையே அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், நயினார்பாளையம் அருகே சேலம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம், காப்புக்காடு அருகில் சாலையோரம் ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காரில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்தனர். இதையடுத்து காரின் அருகில் கிடந்த சாவியை எடுத்து, காரை திறந்து சோதனை செய்தார்கள். அப்போது பின்பக்க இருக்கையின் கீழ்பகுதியில் தலையில் வெட்டு காயங்களுடன், பழனிவேலின் உடல் சாக்குமூட்டையில் கிடந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதற்கிடையே பழனிவேலின் சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து நெய்வேலிக்கு சென்ற காவல்துறையினர், அவரது மனைவி மஞ்சுளாவிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்தார்கள். அப்போது தனது கணவனை தம்பி மற்றும் அவனது நண்பர்கள் உதவியோடு கொடூரமாக கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் ''எனது கணவர் என்.எல்.சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இதனால் அவர் கைநிறைய சம்பாதிக்கிறார். ஆனால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இதனால் அவர் வீட்டு செலவுக்கு கூட பணம் கொடுப்பதில்லை. அவ்வப்போது என்னை அடித்துத் துன்புறுத்தி வந்தார். தினமும் இது தொடர்ந்து கொண்டிருந்ததால் அவரைக் கொலை செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. இதையடுத்து எனது தம்பி மற்றும் அவரது நண்பர்கள் உதவியோடு எனது கணவரை கொலை செய்தோம்'' என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள் '' கொலை செய்ததை தவிர மஞ்சுளா கூறும் காரணங்கள் யாவும் நம்பும்படி இல்லை. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு சோரியாசிஸ் வியாதி இருந்திருக்கிறது. அதனால் மஞ்சுளாவிற்கு வேறொருவருடன் தொடர்பு இருந்து, அதற்காகவும் கொலை நடந்திருக்கலாம். முழு உண்மையும் விசாரணைக்கு பின்பே தெரியவரும்''என்றனர்.

இதற்கிடையே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மஞ்சுளாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மஞ்சுளாவின் தம்பி ராமலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்நிலையில் என்.எல்.சி. ஊழியரை அவரது மனைவியே கொலை செய்து உடலை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MURDER, CUDDALORE, NLC, WIFE, VILLUPURAM