ஒரே ஒரு ‘பேஸ்புக்’ போஸ்ட்.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய நித்தியானந்தா..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நித்தியானந்தா வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக 1980-ம் ஆண்டு முதல் அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இவர் கடந்த 2012 ஆண்டு ஏப்ரல் 27 -ம் தேதி நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்தார். இதற்கு அப்போது கடும் சர்ச்சைகள் எழுந்தது. இதனை அடுத்து அதே ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார். இதன்பின்னர், திருவாடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தியை இளைய ஆதீனமாக நியமித்தார்.
இதனிடையே நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக நியமித்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு நித்தியானந்தா மடத்துக்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில், தன்னை 293-வது பீடாதிபதியாக நித்தியானந்தா குறிப்பிட்டிருந்தார். இந்த குறிப்புகள் அனைத்தும் நித்தியானந்தா முறைகேடாக தயாரித்தது என ஆதீன மடம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நித்தியானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் தான் பெற்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் மதுரை ஆதீன அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்