'நம்ம பொண்ணு நாம சொல்றத தான் கேட்பா'... 'நம்பிக்கையா இருப்போம்'... 'கோர்ட்டில் இளம்பெண் வாயிலிருந்து வந்த வார்த்தை'... ஆடிப்போன பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் நித்யானந்தன். இவர் அதே பகுதியில் சதீஸ் என்பவர் நடத்தி வரும் செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். அப்போது அவருக்கும், சதீசின் அக்காள் மகளான காயத்திரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்குக் காயத்திரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
பின்னர் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். 3-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து காயத்திரி கடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தனை கொடுமுடி போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். அவர் தனது காதல் மனைவி காயத்ரி உடன் வந்த நிலையில், போலீசாரிடம் காதல் கணவர் நித்யானந்தன் உடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்தார்.
இதனால் காயத்திரியை நித்தியானந்தனுடன் போலீசார் அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு அவர்கள் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இந்தநிலையில் செல்போன் கடையின் உரிமையாளரும், காயத்திரியின் மாமாவுமான சதீஸ், நித்யானந்தனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்றும், ரங்கம்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து காயத்திரிக்கும், அவரது பெற்றோர் சொத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விடுங்கள் எனக் கூறியுள்ளார்.
புதுமண தம்பதியரும் அவர்கள் சொன்னதை கேட்டு, உறவினர்கள் சிலருடன் ஈரோட்டுக்குக் கடந்த 17-ந் தேதி காரில் வந்தார். இதனிடையே ரங்கம்பாளையம் பகுதியில் பத்திர பதிவு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் காத்திருந்த காயத்திரியின் உறவினர்கள், நித்யானந்தன் தனது மனைவியை அழைத்து வந்ததும், அவர்கள் ஆயுதங்களுடன் வந்து காயத்திரியைக் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன நித்யானந்தன், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதல் கணவரை மறந்துவிட்டு தங்களுடன் வந்துவிடுமாறு கூறியதாகத் தெரிகிறது. அதற்கு அவரும் பெற்றோருடன் இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இதனால் தங்கள் மகள் தங்களோடு வந்து விடுவார் எனக் காயத்திரியின் பெற்றோர் நம்பிக்கையோடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கடத்தல் வழக்கு நடந்து வருவதால் காயத்திரியை ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பெற்றோர் நேற்று அழைத்துச் சென்றார்கள். அங்கு நீதிபதி முன்பு காயத்திரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காயத்திரியின் பெற்றோர் சற்றும் எதிர்பாராத பதிலை நீதிபதி முன்பு கூறினார். அதில், ''தனக்குப் பெற்றோருடன் வாழ விருப்பமில்லை என்றும், தனது காதல் கணவர் நித்யானந்தனை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரினார்''.
காயத்திரியின் இந்த பதில் அவரை அழைத்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்யானந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி மாலதி போலீசாருக்கு உத்தரவிட்டார். நித்யானந்தனை போலீசார் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினார்கள். அதன்பிறகு காதல் கணவரான நித்யானந்தனுடன் காயத்திரியைச் சேர்த்து வைத்து நீதிபதி அனுப்பி வைத்தார்.
பெற்றோரிடம் உங்களோடு இருக்கிறேன் என மகள் கூறியதாகக் கூறப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் அவர் காதலனோடு செல்வதாகக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்