'போதையில் வந்த புதுமாப்பிள்ளை'...'கோபத்தில் இருந்த தந்தை'...ஒரு செகண்டில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை அவரது தந்தையே வெட்டி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு, லோகேஷ் என்ற மகன் இருக்கிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த கலா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. லோகேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு லோகேஷ் சென்னையில் செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து பார்த்து வந்தார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையேடு வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். அதோடு மது குடித்து விட்டு வந்து தனது தந்தை கிருஷ்ணப்பா மற்றும் தாய் ராதம்மாள் ஆகியோரிடம் பணம் கேட்டும் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். மகனின் செயலால் வெறுப்படைந்த கிருஷ்ணப்பாவும், அவரது மனைவி ராதம்மாளும் ஓசூரில் உள்ள தனது மகள் மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணப்பா சானமாவு கிராமத்திற்கு வந்தார். அப்போது குடிபோதையில் வந்த லோகேஷ் தனது தந்தையிடம் பணம் கேட்டு மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். அப்போது ''கல்யாணம் ஆன பிறகும் இப்படி காசு கேட்டு தொந்தரவு செய்கிறாயே, உன்னை நம்பி வந்த பெண்ணை எப்படி பாத்துக்க போற'' என கிருஷ்ணப்பா தனது மகனிடம் கோபமாக கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த லோகேஷ் கீழே கிடந்த கட்டையை எடுத்து கிருஷ்ணப்பாவை தாக்க முயன்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்ணப்பா, அதே கட்டையை பிடுங்கி லோகேசின் தலையில் அடித்தார். மேலும் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து லோகேசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
ஆத்திரத்தில் மகனை கொலை செய்ததை நினைத்து துடித்து போன கிருஷ்ணப்பா, உடனே உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிப்பழக்கத்தினால் ஓட்டுமொத்த குடும்பமே தற்போது நிலைகுலைந்து போயிருப்பது தான் சோகத்தின் உச்சம்.