'விட்ருங்க.. ப்ளீஸ்!'.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை விசாரணைக்காக சேலத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது காதலனின் உறவினர்கள் வழிமறித்து தாக்கியதால் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் தங்கவைக்கப்படும் நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் காலனியை சேர்ந்தவர் விமல். இவர் சேலம் மாவட்டம் சின்ன சீரகப்பாடி கிராமத்தை சேர்ந்த கிருத்திகா என்பவருடன் புதுவை கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக வேலை பார்த்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் வைத்து விமல், கிருத்திகாவை பதிவுத் திருமணம் செய்துகொண்ட கையோடு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதனிடையே கிருத்திகாவின் பெற்றோர், விமல் தங்கள் பெண்களை கடத்திச் சென்றுவிட்டதாக சேலம் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளிக்க, போலீஸாரோ கிருத்திகாவின் உறவினர் ஒருவருடன் வளவனூர் சென்று, அங்குள்ள போலீசாரின் உதவியோடு தம்பதிகளை விசாரணைக்காக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் அவர்களை செல்லவிடாமல், உள்ளூர் இளைஞர்களும் விமலின் உறவினர்களும் வழிமறித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த போலீஸாரிடம் அந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனிடையே தங்களை இறக்கிவிடும்படி காதல் ஜோடிகள் இருவரும் கட்டிக்கொண்டு கதறி அழுத சம்பவம், காதல் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போல் கண்கலங்க வைத்துள்ளன. அதன் பின் உதவி காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமாரிடம் காதல் ஜோடி ஒப்படைக்கப்பட்டபோது, சேலம் ஆட்டையாம்பட்டி போலீசாரிடம் விசாரணை நடத்தினர். அவர்களோ வழக்குப் பதிவு செய்யப்படாமல் வந்திருப்பதும், இளம் ஜோடி இருவரும் மேஜர் என்றும் தெரியவந்ததை அடுத்து, தம்பதி இருவரும் விமலின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.