'காலையில் ஜாம் ஜாம் என நடந்த கல்யாணம்'... 'மாலையில் பாலும், பழமும் சாப்பிட போன மணமக்கள்'... 'என் பொண்ணுக்கு வந்த நிலமை யாருக்கும் வர கூடாது'... கதறிய பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாது. அது மகிழ்ச்சியான நிகழ்வோ அல்லது சோகமான நிகழ்வோ. ஆனால் அது சோகமான நிகழ்வாக இருந்தால் வாழ்க்கையையே அது புரட்டிப் போட்டு விடும்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள இளஞ்செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே வேலை தொடர்பாகத் திருச்சிக்குச் சென்று அங்கேயே குடும்பத்துடன் தங்கி விட்டார். இவரது மகன் விக்னேஸ்வரன். இவருக்குத் தனது சொந்த ஊரிலேயே மணப்பெண்ணைப் பார்த்து அங்கேயே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை மலைச்சாமிக்கு இருந்துள்ளது.
இதையடுத்து சாயல்குடி அருகே கடுகு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவரைத் தனது மகனுக்கு மலைச்சாமி பேசி முடித்தார். இவர்களது திருமணத்தை பிப்., 24ல் கடுகு சந்தை முத்துராமலிங்கபுரம் அம்மன் கோயிலில் நடந்த இரு வீட்டாரும் தீர்மானித்தனர். இதற்காகத் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில், நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
இதையடுத்து திருமண சடங்குகள் முடிந்த நிலையில் மணப்பெண்ணின் வீட்டிற்கு மணமக்கள் இருவரும் பாலும், பழமும் சாப்பிடச் சென்றுள்ளார்கள். அங்கு உறவினர்கள் அவருக்குப் பாலும். பழமும் கொடுத்த நிலையில், மணமகன் விக்னேஸ்வரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்துள்ளார்.
இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரை உடனடியாக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்து போனார். இதனால் மணப்பெண் கதறித் துடித்து அழுதார். திருமண வாழ்க்கையை ஆரம்பிப்பதற்குள் மொத்த சந்தோஷமும் போய் விட்டதே என இரு குடும்பத்தினரும் கதறி அழுதார்கள்.
அதே நேரத்தில் என் பொண்ணுக்கு நடந்த சோகம் போல எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது எனப் பெண்ணின் பெற்றோர் கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. இதையடுத்து விக்னேஸ்வரனின் இறுதிச் சடங்கு நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது. காலையில் திருமணம் முடிந்து மாலையில் மணமகனின் இறப்பு இரு வீட்டார், உறவினர்கள், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்