சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து, அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. குடிநீருக்காக பல வாரங்கள் காத்திருக்கும் நிலை உருவாகி மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள தண்ணீர் பிரச்சனை குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம், புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2018-ம் ஆண்டில் புழல் ஏரியின் நீர் இருப்பு அளவில் மிக அதிகமாகவும், தற்போது மிகவும் வறண்ட நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதேபோன்று, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு அளவும் அபாயகரமான நிலையில் இருக்கிறது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.