'அவிழும் முடிச்சுகள்'...'முக்கிய புள்ளியின் மகனிற்கு தொடர்பு'?... 'முன்னாள் மேயர்' வழக்கில் அதிரடி திருப்பம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தையே உலுக்கிய நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், திமுக பெண் பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக கடந்த 1996-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது கணவர் முருகசங்கரனுடன் நெல்லையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 23-ஆம் தேதி, உமா மகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதனிடையே கொலை தொடர்பாக எந்த வித துப்பும் கிடைக்காத நிலையில், இது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக விளங்கியது. இருப்பினும் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தார்கள். முன்விரோதம் காரணமா அல்லது அரசியல் காரணமா என்ற கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் மூவர் கொலை தொடர்பாக, திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை, தங்கள் விசாரணை வளையத்தில் காவல்துறையினர் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உமா மகேஸ்வரி மற்றும் சீனியம்மாள் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இது அரசியல் தொடர்பான கொலையா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கில், திமுக பிரமுகரின் மகன் காவல்துறையின் விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.