‘காவி வேஷ்டி’.. கிணற்றில் ‘தலைகுப்புற’ கிடந்த சாமியார் சடலம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விவசாய கிணற்றில் சாமியர் ஒருவரின் சடலம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுக்காலியூர் அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அப்போது கிணற்றில் காவி வேஷ்டி அணிந்து தலை குப்புற ஆணின் சடலம் மிதந்து கிடந்துள்ளது. இதனை அடுத்து சடலத்தை மீட்க தீயணைப்பு வீரர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த சிந்து நகரில் உள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற பூர்ண சேவானந்தா (55) என்பது தெரியவந்துள்ளது.
இவர் எதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார்? இது தற்கொலையா? அல்லது கொலையா? என போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பூர்வ சேவானந்தாவின் மீது திருப்பூர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இன்று (12.03.2020) நடைபெற இருந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு பயந்து பூர்ண சேவானந்தா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.