'உருகி உருகி காதலிச்சான்'... 'கொஞ்சம் கூட சந்தேகம் வராத நடிப்பு'... 'இளம்பெண் அளித்த புகார்'... அடுத்த கட்டத்திற்கு செல்லும் காசி வழக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற இளைஞர், சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பேசி, அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின்னர் ஆபாசமாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், இந்த கொடிய சம்பவத்தில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் சிலரையும் போலீசார் கைது செய்தனர். வழக்கின் தீவிரத்தை உணர்ந்த கன்னியாகுமரி போலீசார், காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு கோரிக்கையை முன் வைத்த நிலையில், காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
காசி குறித்து சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகாரளித்ததை தொடர்ந்து தான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்தது. அதன் பிறகு, பல பெண்கள் காசி மீது முன்வந்து புகாரளித்தனர். விஐபிகள் சிலரின் மனைவி உட்பட, பலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பல காவல் நிலையங்களில் காசிக்கு எதிராக புகார்களை அளித்திருந்தனர்.
காசி மீது பெண்கள் அளித்த 6 பாலியல் புகார்கள், ஒரு கந்துவட்டி புகார் என மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் ஏற்கெனவே கந்துவட்டி, ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும் 5 வழக்குகளின் ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் திரட்டி வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பது போல நடித்து வன்கொடுமை செய்ததாக பதிவான புகாரின் அடிப்படையில் காசி மீது மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னை உருகி உருகி காசி காதலித்ததாகவும், அதனை நம்பி ஏமாந்து போன என்னை ஆபாசம் படம் எடுத்து மிரட்டியதாகவும் அந்த பெண் மனவேதனையுடன் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, 400 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். அதில், ஈவு இரக்கமின்றி இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், அவர்களிடம் மிக கொடூரமாக காசி நடந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு குற்றப்பத்திரிகை, கந்துவட்டி வழக்கில் காசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
காசியின் வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த வழக்கில் இன்னும் பல திருப்பங்கள் நிகழலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்