'டெஸ்டிங்க்கு போன லேப்- டாப்'... 'மீண்டும் கிக் ஸ்டார்ட் ஆன காசியின் வழக்கு'... என்னவெல்லாம் வெளியாகும்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தையே உலுக்கிய காசி வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவனது லேப்- டாப், செல்போன் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி பல இளம் பெண்களுடன் நெருக்கமாகப் பழகி, அதனை ஆபாசமாக எடுத்து, அதை வைத்துப் பல பெண்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து காசியால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் மற்றும் சிறுமி உள்பட 3 பெண்கள் தனித்தனியாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட காசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவனது நெருங்கிய நண்பர்கள் 2 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், காசியின் நண்பனான, நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நண்பனைக் கைது செய்யும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
இதற்கிடையே இந்த இருவரும் சேர்ந்து தான் காசி, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து காசி வழக்கு தொடர்பாகக் குமரி போலீசார் சேகரித்த அனைத்து ஆவணங்களும், தகவல்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை ஆய்வாளர் சாந்தி பெற்றுக் கொண்டார். ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட முதல் நாளே விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். முன்னதாக காசி பயன்படுத்திய லேப்- டாப் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், லேப்- டாப், செல்போன் ஆகியவற்றை ஆய்வுக்காக சோதனைக்கூடத்துக்கு அனுப்பி உள்ளனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாறியுள்ள நிலையில், லேப்- டாப், செல்போன் ஆய்வுக்குச் சென்றுள்ளதால், இந்த வழக்கில் பல மர்ம முடிச்சுகள் அவிழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்