ரெண்டு நாளா பூட்டியே இருந்த வீடு.. திடீரென வெளியே ஓடி வந்து மகள் சொன்ன விஷயம்.. பகீர் சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவியின் சடலத்துடன் 2 நாட்களாக கணவன் வீட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் கான்பியர் (வயது 47). இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா (வயது 32). இவர்களுக்கு மஞ்சு (வயது 13), அக்சரா (வயது12) என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் ஜோஸ் கான்பியர் ஊருக்கு வந்தார். இதன்பின்னர் குளச்சலில் இருந்து நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் வாடகை வீட்டுக்கு மாறியுள்ளனர். இந்த வீட்டுக்கு வந்து 3 மாதங்களே ஆவதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பெரிதாக பழக்கம் ஏற்படவில்லை.
இந்த சூழலில், கடந்த 2 நாட்களாக இவர்களது வீடு உள் பக்கமாகவே பூட்டியே இருந்துள்ளது. திடீரென நேற்று காலை மூத்த மகள் மஞ்சு கழுத்தில் காயத்துடன் அழுதுகொண்டே வெளியே ஓடிவந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே அவர்களது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் தாய் வனஜா சடலமாக கிடந்துள்ளார். இரண்டாவது மகள் அக்சரா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்தார். ஜோஸ் கான்பியர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஜோஸ் கான்பியர் மற்றும் வனஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தில் காயங்களுடன் இருந்த மஞ்சுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், கணவரை பிரிந்த வனஜா, ஜோஸ் கான்பியரை இரண்டவதாக திருமணம் செய்துள்ளார். இதில் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு, ஜோஸ் கான்பியர் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட தகராறில் வனஜாவை கொன்று முகத்தை கவரால் கட்டி, கட்டிலுக்கு அடியில் சடலத்தை ஜோஸ் கான்பியர் மறைத்துள்ளார்.
மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகள்கள் இருவரும், அம்மா எங்கே எனக் கேட்டுள்ளனர். அப்போது திடீரென மகள்கள் இருவரையும் தாக்கி அவர்களின் வாயில் துணியை வைத்து அமுக்கி கை கால்களை கட்டியுள்ளார். இதனை அடுத்து 2 நாட்களாக வெளியே வராமல் ஜோஸ் கான்பியர் வீட்டுக்குள் பதுங்கி இருந்துள்ளார்.
திடீரென தனது மூத்த மகள் மஞ்சுவின் கழுத்தை கத்தியால் ஜோஸ் கான்பியர் அறுத்து உள்ளார். ஆனால் மனம் கேட்காமல் கத்தியை வைத்துவிட்டு, அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மஞ்சு கயிறு அவிழ்த்து வெளியே வந்து சொன்ன பின்னரே இந்த சம்பவம் குறித்து தெரிய வந்திருக்கிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ.புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மற்ற செய்திகள்