அதிகாரத்திமிர்... பாஜக-வை குத்திக்காட்டி திமுக-வை கடுமையாக சாடிய சீமான்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாஜக-வை குத்திக்காட்டி திமுக-வை 'அதிகாரத்திமிர்' என கடுமையக சாடியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வினர் கூட்டத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், வட இந்தியாவில் பாஜக செய்யும் அதே வகையிலான வன்முறை செயல்களையே திமுக-வும் செய்வதாகவும் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திமுக-வின் கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக-வினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுக-வினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவி-னரின் செயல் வெட்கக்கேடானது.
நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்