பேஸ்புக்கில் வந்த ஒரு ‘மெசேஜ்’.. நம்பி பேசிய ‘இளம்பெண்’.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாட்டிலிருந்து 40 லட்சம் ரூபாய், தங்க நகைகள் அனுப்பி வைத்துள்ளதாக மர்ம நபர் கூறியதை நம்பி இளம்பெண் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரைஞானம்பட்டியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு பேஸ்புக் பக்கத்தில் இருந்து டோனி மைக்கேல் என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நம்பிய சந்தியா உடனே தனது சகோதரன் ஜோதியின் செல்போன் நம்பரை டோனி மைக்கேலுக்கு கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து ஜோதியிடம் செல்போனில் பேசிய டோனி மைக்கேல், 40 லட்சம் ரூபாயும், தங்க நகைகளும் தங்களுக்கு பார்சல் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லி விமானநிலைய சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக மற்றொரு நபர் ஜோதியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய நபர், தங்களுக்கு லண்டனில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், சுங்கவரியைக் கட்டினால் வீட்டுக்குப் பார்சல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய ஜோதி 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை அவர் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் பார்சல் ஏதும் வராததால், அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோதி மற்றும் அவரது சகோதரி சந்தியா, இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பணம், தங்க நகை ஆசையால் மர்ம நபர்களிடம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மற்ற செய்திகள்