'என்ன ஆரம்பிக்கலாங்களா'... '120ஆடுகள், 300க்கு மேல கோழிகள், 2500 கிலோ பிரியாணி'... அண்டா அண்டாவாக தயாரான கோவில் பிரசாதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 120ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்குப் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

'என்ன ஆரம்பிக்கலாங்களா'... '120ஆடுகள், 300க்கு மேல கோழிகள், 2500 கிலோ பிரியாணி'... அண்டா அண்டாவாக தயாரான கோவில் பிரசாதம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம் பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோயிலில் வருடந்தோறும் வழங்கப்படும் அன்னதானம் என்பது உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு தரப்பினரும், மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு தரப்பினரும் பிரியாணி திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

Mutton biryani served as prasadam at Muniyandi temple festival

அந்த வகையில் 86வது ஆண்டு பிரியாணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதற்காகப் பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி, விரதம் மேற்கொள்வர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Mutton biryani served as prasadam at Muniyandi temple festival

இந்த விழாவிற்குத் தமிழகம், ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட, ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாகப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 120ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்குப் பலியிடப்பட்டு, 2500 கிலோ பிரியாணி அரிசியில்  அசைவ பிரியாணி அண்டா அண்டாவாகத் தயார் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவார்கள்.

Mutton biryani served as prasadam at Muniyandi temple festival

இந்த மெகா அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இதற்கிடையே தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வரும் அதன் உரிமையாளர்கள், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் விடுமுறை விட்டு விடுவார்கள்.

Mutton biryani served as prasadam at Muniyandi temple festival

இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் முனியாண்டி சுவாமியை வேண்டி தாங்கள் வைக்கும் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இதற்காகக் கோவிலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக வழங்கும் மக்கள் அவற்றை வைத்து பிரியாணி சமைத்து அந்த உணவை உண்டால் நோய் நொடிகள் அண்டாது என்பதும் அவர்களின் நம்பிக்கையாகும்.

Mutton biryani served as prasadam at Muniyandi temple festival

இதில் எந்த வித மத, சாதி வேறுபாடுகள் இல்லாமல் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொள்வது வழக்கம். மேலும், விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் சிங்கப்பூர் மலேசியா என பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்