'எப்படியாச்சும் பிள்ளைங்கள பார்த்திடணுமே...' 'அன்புக்கு முன்னால தூரம்லாம் ஒண்ணுமே இல்ல...' - நெகிழ வைத்த சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மும்பையில் வசிக்கும் தம்பதிகள் இருவர் தன் பிள்ளைகளின் பிறந்தநாளுக்காக 1400கி.மீ பயணம் செய்து வந்த சம்பவம் கிராம மக்களையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'எப்படியாச்சும் பிள்ளைங்கள பார்த்திடணுமே...' 'அன்புக்கு முன்னால தூரம்லாம் ஒண்ணுமே இல்ல...' - நெகிழ வைத்த சம்பவம்...!

புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் சேர்ந்தவர்கள் செல்வம் - சங்கீதா தம்பதிகள். இவர்கள் பல ஆண்டுகள் முன்பே மும்பையில் குடியேறி மகள் வேணி மற்றும் மகன் யோகேஸ்வரனுடன் வசித்து வருகின்றனர். தன் இரு பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டு கலாச்சாரம், கிராமத்தின் அருமை சூழல் ஆகியவற்றை உணர்த்த எப்போதும் பள்ளி விடுமுறை போது குடும்பத்தோடு பில்லக்குறிச்சிக்கு வருவது இயல்பு.

அதுபோல இந்த வருடமும் கொரோனா எதிரொலியாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவே, பிள்ளைகளை மும்பையிலிருந்து அழைத்து வந்த செல்வம், கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டுச் சென்றார்.

அதையடுத்து கொரோனா பரவல் அதிகமாகவே நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இரு பிள்ளைகளும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தங்கள் தாத்தா, பாட்டி வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் மகன் யோகேஸ்வரனுக்கு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த நாள்.

இந்நிலையில் பிறந்ததிலிருந்து பிள்ளைகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடிய செல்வம் - சங்கீதா தம்பதிகளால் இந்த வருடம் பிள்ளைகளை கண்ணால் காண்போமா என்ற சந்தேகமே எழுந்துள்ளது. உடனடியாக முடிவெடுத்த செல்வம் மும்பையிலிருந்து சுமார் 1400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கறம்பக்குடிக்கு ஸ்கூட்டரிலேயே பயணம் செய்து தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்திருக்கின்றனர்.

இதுகுறித்து கூறிய செல்வம் சங்கீதா தம்பதிகள், 'நான் மும்பைல மளிகைக்கடை வெச்சிருக்கேன். ரெண்டு பேரோட பெற்றோரும் புதுக்கோட்டையில் வசிக்கிறாங்க. எங்க பிள்ளைங்க மும்பைல படிச்சி வளர்ந்தாலும், நம்ம ஊரோட மொழி, கலாசாரத்தை தெரிஞ்சிக்கணும்னு சொல்லித்தான் விடுமுறைக்குக் கொண்டு வந்துவிடுவோம். அதுபோல தான் இந்த வருஷமும் வந்தோம். ஆனா, 6 மாசத்துக்கும் மேலாக இந்தப் பிரச்னை நீடிச்சிருச்சு. ஊருக்கு கிளம்பி வந்திடலாம்னா, போக்குவரத்தே இல்லை.

அதுமில்லாம அக்டோபர் 28-ம் தேதி பையனுக்குப் பிறந்தநாள். பஸ்ஸுக்கு முன்னாடி இருந்ததை விட மூன்று மடங்கு செலவு செய்ய வேண்டி இருக்கு. விமானத்துல வர்ற அளவுக்கு வசதி இல்லை. ஆனாலும், எப்படியாவது ஊருக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்திடணும்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்பதான், ஸ்கூட்டியிலேயே ஊருக்கு போயிடலாம்ங்கிற ஐடியா வந்துச்சு. இதுபத்தி சங்கீதாக்கிட்ட கேட்டப்ப, உடனே ஓகே சொல்லிட்டாங்க. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். மும்பையிலிருந்து 21-ம் தேதி கிளம்பினோம். பெட்ரோல், ஆயில், ரூம், சாப்பாடுன்னு 5 ஆயிரத்துக்குள்ளேயே எல்லாமும் முடிஞ்சது. ரெண்டு பேரும் பிள்ளைகளைப் பார்க்க ரொம்ப ஆவலா இருந்ததாலயும், விரும்பி டூவிலர்ல வந்ததாலயும் 1400 கி.மீ தூரம் வந்தும் எந்த அலுப்பும் தெரியல' என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்