பாதி எரிந்த நிலையில் கிடந்த 'இளைஞர்' சடலம்.... கதறித்துடித்த தாய் 'பெற்ற மகனுக்கு'... தானே கொள்ளி வைத்த அவலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கற்பககுமார் என்ற இளைஞர் ஒருவர் விபத்தில் இறந்துவிட மாற்று சமூகத்தினர் அவரின் உடலை பொது சுடுகாட்டில் தகன மேடையில் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாதி எரிந்த நிலையில் கிடந்த 'இளைஞர்' சடலம்.... கதறித்துடித்த தாய் 'பெற்ற மகனுக்கு'... தானே கொள்ளி வைத்த அவலம்!

காவல்துறை வரை இந்த பிரச்சனை சென்ற பிறகும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, சுடுகாட்டின் தகன மேடையில் எரிக்காமல் கீழேயே உடலை வைத்து எரித்த போது பாதி உடல் மட்டுமே எரிந்த நிலையில், மீதி உடலை இளைஞரின் தாயாரே எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கற்பககுமாரின் தாயார் கூறுகையில், 'தஞ்சாவூரில் சலூன் கடை நடத்தி வரும் என் மகன் கடை மூடப்பட்டு பல நாட்களான நிலையில் அதை பார்க்க சென்ற போது விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை எரிக்க வேண்டி பொது சுடுகாட்டில் விறகுக்கடைகளை அடுக்கி வைத்து எரிப்பதற்கான ஏற்பாட்டை செய்து என் மகனின் உடலை தூக்கிச் சென்றனர். அப்போது சுடுகாட்டில் இருந்த மாற்று சமூகத்தினர், அடுக்கி வைத்திருந்த விறகுக்கட்டிகளை கீழே தூக்கி வீசினர்.

பொது சுடுகாட்டில் எங்களுக்கு இடமில்லையா என கேட்ட போது, தாழ்ந்த ஜாதியை சேர்ந்த நீங்கள் எங்களை எதிர்த்து பேசுகிறீர்களா என கூறி தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் கீழே கிடந்த கட்டைகளை எடுத்து அடிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் எந்த பயனுமில்லை. இதனால் வேறு வழியில்லாமல் உடலை கீழே வைத்து அவசர அவசரமாக எரித்தனர். ஆனால் அடுத்த நாள் என் மகன் உடல் பாதி மட்டும் எரிந்து கிடப்பதாக என சிலர் சொல்லிய நிலையில் பதறியடித்து கொண்டு சுடுகாட்டிற்கு ஓடினேன். பெண்கள் செல்லக்கூடாது என சிலர் தடுத்த போதும் அதனை ஏற்காமல் அங்கு சென்றேன். அழுதுகொண்டே என் மகனின் உடலுக்கு கொள்ளி வைத்தேன். பெற்ற மகனுக்கு தாயே கொல்லி வைத்த துயரம் எங்காவது நடந்தது உண்டா?' என கூறி கதறி அழுதுள்ளார்.

கற்பககுமாரின் உறவினர் ஒருவர், 'கற்பககுமாரின் உடலை எரிக்க முற்பட்ட போது, மாற்று சமூகத்தினர் சிலர், இப்போது எரிக்க அனுமதி தந்தால், நாளைக்கு  வேறு யாரவது வருவார்கள். அப்போது உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என கேட்டார். போலீசாரும் உங்களுக்கு தனி சுடுகாடு கட்டி தருகிறோம். தற்போது இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என எங்களிடம் கூறினர்' என தெரிவித்தார்.