விபரீத முடிவு எடுத்த தாய்... ‘கசக்குதும்மானு’ சொன்ன குழந்தைகள்... நொடியில் மனம் மாறிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால், 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரீத முடிவு எடுத்த தாய்... ‘கசக்குதும்மானு’ சொன்ன குழந்தைகள்... நொடியில் மனம் மாறிய சம்பவம்!

தருமபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவரது மனைவி அம்சவேணி (37). இவர்களுக்கு சௌமியா (16), சத்தியப்பிரியா (11) என்ற 2 மகள்களும், மணிகண்டன் (10), சபரிநாதன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். லாரி ஓட்டுநரான கோவிந்தராஜ், தனது குடும்பத்துடன், கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் அருகே உள்ள தியாகி குமரன் வீதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் குழந்தைகள் அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்களது 2-வது மகள் சத்தியப்பிரியா நுரையீரல் கோளாறால், அவதிப்பட்டு வந்த நிலையில், அவருடைய சிகிச்சை மற்றும் வீட்டு செலவுக்கு பணமின்றி தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அம்சவேணி, நேற்று கோவிந்தராஜ் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தபோது, அரளி விதையை அரைத்து, தனது குழந்தைகளுக்கு நேற்றிரவு சாப்பாட்டில் கலந்து கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். பின்னர் அதை சாப்பிட்ட குழந்தைகள் சாப்பாடு ஏன் கசக்குது அம்மா என்று கேட்டுள்ளனர்.

இதில் மனம் மாறிய அம்சவேணி குழந்தைகள் அனைவரையும் ஆட்டோவில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அங்கு தாய் மற்றும் குழந்தைகள் உள்பட 5 பேருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

SUICIDE, MOTHER, DAUGHTERS, SONS