பின்னால் வந்த ஆட்டோ மோதி... ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த தாய், மகள்... அரசுப் பேருந்தால் நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நிலை தடுமாறி கீழே விழுந்தப் இளம் பெண் மீது அரசுப் பேருந்து ஏறியதில், தாய் மற்றும் 5 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரிசூலம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுதா (27). இவர்களுக்கு ஷிவானி (5) என்ற மகளும், தீபக் (2) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று விடுமுறை என்பதால், சுதா தனது குழந்தைகள் இருவருடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கீழ்க்கட்டளை அருகே ஈச்சங்காடு மேடவாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது, பின்னால் வந்த ஆட்டோ ஒன்று சுதா வந்த ஸ்கூட்டரின் மீது மோதியது.
இதில் நிலைத் தடுமாறி சுதாவின் ஸ்கூட்டர் கீழே சாய்ந்தது. இதில், தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் வண்டியிலிருந்து கீழே விழுந்தனர். அவர்கள் எழுந்து சுதாரிப்பதற்குள், அப்போது மேற்கு தாம்பரத்தில் இருந்து தியாகராயநகர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று சாலையில் விழுந்து கிடந்த சுதா மற்றும் சிறுமி ஷிவானி மீது ஏறி இறங்கியது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒரு கணம் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.
ஆனாலும் தாய் மற்றும் 5 வயது மகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிறுவன் தீபக் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினான். இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.