‘கண்டித்தும் திருந்தாத கணவனால்’... 'கடிதம் எழுதிவைத்துவிட்டு’... ‘3 பெண் குழந்தைகளுடன்’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எவ்ளோ கண்டித்தும், மாறாத கணவனின் மோசமான நடவடிக்கையால், மூன்று பெண் குழந்தைகளுடன், தாய் செய்த விபரீத காரியம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், ஸ்ரீமதுரை பகுதியைச் சேர்ந்தவர், ஓட்டுநரான முருகன். இவரது மனைவி 34 வயதான வனிதா. இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், முருகனுக்கு குடிப்பழக்கம் மற்றும் வேறு ஒரு பெண்ணிடம் இருந்த நெருங்கிய தொடர்பு ஆகியவற்றால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவனை கண்டித்தும், அவர் திருந்தாததால், வனிதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் அருந்தியுள்ளார் வனிதா. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர், வனிதா மற்றும் மூன்று மகள்களையும் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நால்வரும், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி தாய் வனிதா உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுகுறித்து கூடலூர் போலீசார் கூறுகையில், “குடும்பத் தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தாயும் விஷம் அருந்தியுள்ளார். ஆனால், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, குழந்தைகள் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பு வனிதா எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் எனது சாவுக்கு கணவர் தான் காரணம் என வனிதா எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையொட்டி அவரது கணவர் முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.