‘உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... 13 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை சற்று குறைந்துள்ளநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 4 நாட்களில், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில், மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சூறைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால், தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.