முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு சின்னம்.. கடலுக்கு நடுவுல இப்படித்தான் கட்ட போறாங்களாம்.. மாதிரி புகைப்படம் வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை கடற்கரையில் நினைவு சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், இதற்கான மாதிரி புகைப்படங்களை தமிழக மாசு கட்டுப்பட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆக. 24ம் தேதி அறிவித்தார். கலைஞர் கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தையும் முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றிருந்தது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
கடலுக்கு நடுவே அமைக்கப்பட இருக்கும் இந்த நினைவு சின்னத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவு சின்னத்தில் இருந்து 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ சிலை ஒன்றும் வைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்படும் பணிகளுக்காக ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேனா நினைவுச் சின்னத்திற்கான மாதிரி வரைபடத்தை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் கடற்கரைக்கும் நினைவு சின்னத்துக்கும் இடையே அமைக்கப்படும் பாலம் கடலலை வடிவில் கட்டப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலில் பேனா நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளது. பேனா நினைவு சின்னத்துக்கு அடியே கலைஞர் கருணாநிதியின் கருத்துக்கள் கல்வெட்டாக பொறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கிரானைட் கற்களால் தளம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை கொடுத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக வரும் ஜனவரி 31 ஆம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என மாசுக்கப்பட்டுப்பட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.
மற்ற செய்திகள்