திமுக, அதிமுக-வுக்கு அடுத்து இந்தக்கட்சி தானா..? தேர்தலில் அசத்திய புதுக்கட்சிகள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடிக்க மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
மக்களவைத் தேர்தலில் 4.8 சதவிகித வாக்குகளைப் பெற்று திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்த 3வது இடத்தைப் பிடித்துள்ளது அமமுக. 38 தொகுதிகளில் 37-ல் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி 4 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் 3.78 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
மத்திய சென்னை, மதுரை, பெரம்பலூர், பொள்ளாச்சி, சேலம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய 9 இடங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது மநீம. கோயம்புத்தூர், தென் சென்னை, வட சென்னை ஆகிய இடங்களில் இக்கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. வடசென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 15 தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது நாதக. ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளில் அமமுக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொங்கு மண்டலத்தைத் தங்களது கோட்டை எனக் கூறும் அதிமுக அங்கு படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அங்கு மநீம பெற்றுள்ள வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோவையில் இக்கட்சி சார்பாக போட்டியிட்ட மகேந்திரன் 1,27,234 வாக்குகளைப் பெற்று அசத்தியுள்ளார். இந்தத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுகவை பல இடங்களில் பின்னுக்குத் தள்ளியுள்ளன மற்ற இரண்டு கட்சிகளும். நகர்ப்புற வாக்குகளை மநீமவும், கிராமப்புற வாக்குகளை நாதகவும் அதிகமாக பெற்றுள்ளன. மாற்றத்தை விரும்பும் படித்த இளம் தலைமுறையினர் அமமுக, நாம் தமிழர் கட்சிக்கு பதிலாக முதன்முதலாக தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தை ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது.