'முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்'... 'முதல்வர் போட்ட முதல் கையெழுத்து'... 5 முக்கிய அரசாணைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து முதல்வராகப் பதவியேற்றதும் கோபாலபுரம் புறப்பட்டுச் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின், தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போது நெகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார்.
இந்நிலையில் தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் 5 முக்கிய கோப்புகளில் ஸ்டாலின் கையொப்பமிட்டார்.
1. முதல் அரசாணையாக கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000 -ஐ குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறகு அது இந்த மாதம் 16 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
3.மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.
4.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வுக்காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
5. கரோனா சிகிச்சைப்பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றாலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.
மேற்கண்ட 5 கோப்புகளில் முதல்வர் முதல் கையெழுத்தாக இட்டுள்ளார்.
மற்ற செய்திகள்