'முதல்வர் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இல்லம் மாற போகிறதா?... 'புதிதாக குடியேற போகும் இல்லம்'... பின்னணி தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசியலில் முதல்வர்களின் இல்லம் என்பது எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சர்களாகப் பொறுப்பேற்பவர்களுக்குச் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பசுமை வழிச் சாலையில் பெரும் பங்களாக்கள் உண்டு. இங்கு தான் அமைச்சர்கள் முதல் சபாநாயகர், துணைச் சபாநாயகர் மற்றும் நீதிபதிகள் வரை குடியிருந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் முதல்வருக்கும் இங்குத் தனி இல்லம் உண்டு. முதல்வராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராகப் பதவி வகித்த ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் இங்குதான் வசித்தனர். தற்போது தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே என்பதால் அமைச்சர்கள் இல்லத்தைக் காலி செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அமைச்சருக்கு இணையான அந்தஸ்து என்பதால் அவர் ஏற்கெனவே உள்ள இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் அலுவலகத்திற்கு அடுத்தபடியாக முதல்வர் இல்லம் என்பது பெரும் அதிகார மையமாகச் செயல்படும்.
முதல்வர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் மேற்கொள்ளும் பல ஆலோசனைக் கூட்டங்கள் முதல்வர் இல்லத்தில் நடைபெறுவது உண்டு. குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் மற்றும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ஆகியவை தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிகார மையமாகச் செயல்பட்ட இல்லங்கள்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது சித்தரஞ்சன் தாஸ் இல்லத்திலிருந்து அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலைக்குக் குடிபெயர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2006 முதல் 2011 வரை உள்ளாட்சித்துறை, துணை முதல்வர் பதவி வகித்த ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு திமுக தோல்விக்குப் பின்னர் தனது சொந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் வசித்து வரும் சித்தரஞ்சன் தாஸ் சாலை பகுதியில் இட நெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அமைச்சர்கள் வசிக்கும் இல்லத்துக்கு மாற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்து வருகிறார். தனபால் வீட்டைக் காலி செய்ய 2 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் 2 மாதம் பொறுத்து காலி செய்தபின் குறிஞ்சி இல்லத்தைத் தயார்ப்படுத்தும் பணி நடைபெறும். அதன் பின்னர் அந்த இல்லத்துக்கு ஸ்டாலின் மாறுவார் எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் அந்த இல்லத்தை முதல்வர் அலுவலகமாக (Camp Office) ஸ்டாலின் பயன்படுத்துவார், சித்தரஞ்சன் இல்லத்தில்தான் வசிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்