தமிழறிஞர் ஔவை நடராசன் மறைவு.. இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழறிஞர் ஔவை நடராசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நேரடியாக அஞ்சலி செலுத்தி உள்ளார்.
Also Read | "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. பேங்க்-அ கொள்ளை அடிச்சிட்டு வந்துடறேன்".. டாக்சி ட்ரைவரை அலறவிட்ட திருடன்..!
ஔவை நடராசன் தனது 85 வயதில் நேற்று இரவு காலமானார். மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர். ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர். 2014-ல் மத்திய அரசின் கீழ் இயங்கும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றியவர்.
1992 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை துணை இயக்குனராக, தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர். 2011 ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
ஔவை நடராஜன் மறைவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "சிறந்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். ஒளவை நடராசன் அவர்கள் 'உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்தவர் தமிழில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட புலமையால், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழார்வலர்கள் இருக்க முடியாது. தமது பேச்சாற்றலால் உவமைக் கவிஞர் சுரதா அவர்களாலேயே பாதி அண்ணா' எனப் பாராட்டப்பட்டவர். ஔவை நடராசன், கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். கலைஞர் கருணாநிதி மறைந்தபோது நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழாரம் சூட்டியவர். தமது இறுதிக்காலம் வரையிலும் கலைஞர் கருணாநிதியின் புகழைப் போற்றி வந்தவர்.
தமது தமிழ்ப் பணிகளுக்காகப் பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை ஔவை நடராசன் அவர்கள் பெற்றிருந்தார். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை ஒளவை நடராசன் அவர்களின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழறிஞர் ஔவை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மற்ற செய்திகள்