'டிரைவர் மட்டும் சாமர்த்தியமா நிறுத்தல'... 'ஐயோ, பெருமூச்சு விட்ட பயணிகள்'...பதற வைத்த திகில் பயணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேபிஎன் நிறுவன ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் ஒன்று தனியாக கழன்று ஓடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் நிறுவனமான கே.பி.என், தனது ஆம்னி பேருந்து ஒன்றில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூர் பகுதியில் வந்தபோது, பேருந்தின் முன் பக்க இடது புற டயர் அப்படியே கழன்று தனியாக ஓடியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில், வேகமாக ஓடிய டயர் சாலையோரம் இருந்த கூட்டுறவு நியாயவிலை கடையின் சுற்று சுவரை உடைத்துக் கொண்டு வளாகத்திற்குள் புகுந்தது.
ஒரு பக்க டயர் இல்லாமல் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்ட பேருந்தை, ஓட்டுனர் சாமர்த்தியமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த 20கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதையடுத்து மாற்று பேருந்தில் பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இதற்கிடையே பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தார்கள். மேலும் பேருந்தின் டயர் ஓடிய வேகத்திற்கு, எதிரே ஏதேனும் இருசக்கர வாகனம் வந்திருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.