'நா படிச்சு உன்ன காப்பாத்துறன்ப்பானு சொன்னாளே'.. குடிபோதை ஆசாமியால் 3 வயது சிறுமி பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் 3-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி மதிய உணவுக்காக தன் அண்ணனுடன் சாலையைக் கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது நடந்துள்ள சோக சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது.
தஞ்சையின் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த எல்கட்ரீசியன் தொழிலாளியான அப்துல் ரஹ்மானின் மகள் அப்ரா பாத்திமா, அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். மதிய உணவு இடைவேளைக்காக சாலையைக் கடந்து சென்றபோது குடிபோதையில் வேகமாக பைக் ஓட்டிக் கொண்டுவந்த ஆசாமி இடித்ததில், சிறுமிக்கு சுய நினைவே போகும் அளவுக்கு தலையில் பலத்த அடி உண்டானதால், அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் பதறியுள்ளனர்.
உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி சிறுமி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். பின்னர், அப்ராவின் அண்ணனும், அப்துல் ரஹ்மானின் மகனுமான சிறுவன் தாய் தந்தையரிடம் ஓடிவந்து தகவலைச் சொன்னதும், குடும்பமே அலறித் துடித்து மகளைக் காணச் சென்றபோது, சிகிச்சை சற்றே சிக்கலாக இருக்கும் என்றும், அப்ரா சுய நினைவை இழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் சிறுமி தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். அங்கு சிறுமிக்கு ஆகும் சிகிச்சை செலவுக்கு வழியின்றி சிறுமியின் தந்தை தவித்துக்கொண்டிருக்கிறார். தவிர முகநூலில் இதுபற்றி பதிவிட்டு நண்பர்களின் உதவியையும் வேண்டியுள்ளார். மேலும் தன் மகள், ‘நல்லா படிச்சு நான் வேலைக்கு போயி உன்னை காப்பாத்துறேன்ப்பா’ என்று அடிக்கடி சொல்வாளென்றும், தற்போது பேச்சு மூச்சின்றி கிடப்பதாகவும் அப்துல் வருந்துகிறார்.
மல்லிப்பட்டினத்தில் இருந்து இரண்டாம்புலிக்காடு செல்லும் வழியில் இருக்கும் டாஸ்மாக்கில் இருந்து குடித்துவிட்டு வரும் வாகன ஓட்டிகள்தான் இந்த விபத்துகளுக்குக் காரணம் என்றும், அதனால் தன் மகளுக்கு ஏற்பட்ட இந்த நிலை யாருக்கும் ஏற்படக் கூடாது; அந்த டாஸ்மாக்கை அங்கிருந்து அகற்றுங்கள் என்றும் அப்துல் கண்ணீர் மல்க கோருகிறார்.