தோண்ட தோண்ட வெளிவரும் சர்ச்சை வீடியோக்கள்!.. மீரா மிதுனின் சேனலைப் பார்த்து... சைபர் கிரைம் போலீஸ் யூடியூப் நிறுவனதுக்கு அவசர கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுனின் வழக்கில் திடுக்கிடும் திருப்பம் உருவாகியுள்ளது.

தோண்ட தோண்ட வெளிவரும் சர்ச்சை வீடியோக்கள்!.. மீரா மிதுனின் சேனலைப் பார்த்து... சைபர் கிரைம் போலீஸ் யூடியூப் நிறுவனதுக்கு அவசர கடிதம்!

நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டாா். அதில் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சேர்ந்த இயக்குநா்கள், நடிகா், நடிகைகளை பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தாா். அவா்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தாா். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

அதைத் தொடர்ந்து, மீரா மிதுனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சைபா் கிரைம் காவல்துறை, மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதனால் சைபர் கிரைம் உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மீரா மிதுனை தேடி வந்தனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீரா மிதுனை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாருடன் தகராறு செய்தார். பின்னர், ஆலப்புழா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீராமிதுன், கோர்ட்டு அனுமதியுடன் இரு தினங்களுக்கு முன் சென்னை அழைத்து வரப்பட்டார்.

அதன் பிறகு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், நேற்று பிற்பகலில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன் பேரில் மீரா மிதுன் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனின் சேனலை முடக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

அந்த யூடியூப் சேனல் மூலமாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் தான், பட்டியலின சமூகம் குறித்தும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் மீரா மிதுன் பேசியது  சர்ச்சையானது.

முன்னதாக அந்த ஒரு வீடியோ மட்டும் சைபர் கிரைம் போலீசாரால் அகற்றப்பட்ட நிலையில், இது போன்ற சர்ச்சைக்குரிய நூற்றுக்கணக்கான வீடியோக்கள் அவரது சேனலில் இருப்பதால் அவற்றை முடக்குவதற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்