'மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின்'... '14வது பட்டமளிப்பு விழா'... 'காணொலி காட்சி மூலம் நடைபெற்றது!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா காணொலி காட்சி மூலம் 25-11-2020 அன்று நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு. A.N. ராதாகிருஷ்ணன் அவர்கள் சார்பாக, ரெக்டார் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார்கள். நிர்வாக அறங்காவலர் திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்கள், துணை வேந்தர் திரு. R.S. நீலகண்டன் அவர்கள் மற்றும் இணை துணை வேந்தர் திரு. S.P. சிவபாதசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக அகில இந்திய அளவில் தலைசிறந்த பொது மற்றும் இரத்தநாள அறுவைச் சிகிச்சை நிபுணரான C.M.K. ரெட்டி அவர்கள் கலந்து கொண்டு பேருரையாற்றினார்கள். அவர் தம் உரையில் மாணவர்களுக்கு போட்டி மனப்பான்மையைத் தவிர்த்து அன்பையும் போதிப்பதே உண்மையான கல்வி என்றும், ஒவ்வொரு மாணவரும் தனித்துவம் கொண்டவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை உணர்ந்து கற்பித்தால் அதுவே நேர்மறை புரட்சியை சமூகத்தில் உருவாக்கும் என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் புதுமையைப் போற்றும் கலாச்சாரத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்தல் வேண்டும் என்றும், கொரோனா தொற்று காலத்தல் சரியான நவீன மருத்துவ யுத்திகளை நம் மாணவர்கள் பயன்படுத்தி சமூகத்திற்கு ஆற்றிவரும் சேவை பாராட்டுதற்குரியது என்றுரைத்தார்கள். மருத்துவத்துறை வணிகமயமாவதைத் தவிர்த்து சமூகத்திற்கு உதவும் புனிதமான சேவை என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது. மேலும் மருத்துவ மாணவர்கள், கருணை, சமூக விழிப்புணர்வு நேர்மறை சிந்தனை போன்ற குணநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.
பல்கலைக் கழகத்தின் ரெக்டார் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் தமது வரவேற்புரையில், பொது மருத்துவம், பல்மருத்துவம், செவிலியர், பொறியியல் இன்ன பிற கல்லூரிகளைத் தன்னகத்தே கொண்ட மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகம், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டு, அதை இன்றுவரை கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் கூறுகையில் மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகம் தொழில்முறை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பாடத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக பெருமிதத்துடன் கூறினார்கள்.
துணை வேந்தர் திரு. R.S. நீலகண்டன் அவர்கள் 2019-2020ஆம் கல்வியாண்டில் பல்கலைக் கழகத்தின் சாதனைகளை விரிவாக பட்டியலிட்டார்கள். குறிப்பாக கொரோனா காலத்தில், பல்கலை நிர்வாகம், உறுப்புக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் பொது மக்களுக்கு ஆற்றிய சேவையினை விரிவாக பட்டியலிட்டார்கள். பட்டமளிப்பு விழாவில் 35 முனைவர்களுக்கு (Ph.D.) பட்டங்களும், 63 மாணவர்களுக்கு பதக்கங்களுடன் பட்டமும், நேரிடையாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 975 மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்கள் காணொலி மூலம் வழங்கப்பட்டன.
மற்ற செய்திகள்