'கிழிந்தது ஸ்கிரீன்!'.. மாஸ்டர் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தபோது ‘தியேட்டரில்’ நடந்த சம்பவம்!.. ‘திருப்பி அளிக்கப்பட்ட பணம்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்கைதி, மாநகரம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு, 50 சதவீத இருக்கைகள் என பல்வேறு சிரமங்களை தாண்டி திரையரங்குகளில் மாஸ்டர் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி படம் பார்க்கவேண்டும் என்று அரசு சார்பிலும், போலீசார் தரப்பிலும், விஜய் மற்றும் படக்குழுவினர் தரப்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒன்றரை வருடமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று விஜய் நடித்த மாஸ்டர் படத்தை பார்க்க தயாராகினர். அப்படி சேலம் தம்மம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் திரைப்படம் சரியாக தெரியாததாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
புதன்கிழமை காலை 6 மணிக்கு திரையிடப்பட்ட ரசிகர்கள் காட்சி நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சேலம் தம்மம்பட்டி பாலம் அருகே இருக்கும் திரையரங்கு ஒன்றில் 250 ரூபாய் கட்டணம் கொடுத்து ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். ஆனால் அங்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் சரிவர தெரியாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து செருப்புகளை எடுத்து வீசியதாக தெரிகிறது.
இதனால் தியேட்டர் ஸ்கிரீன் கிழிந்துவிட்டது. இதனையடுத்து திரைப்படம் திரையிடப்படுவது உடனே நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு விரைந்த போலீசார் ரசிகர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் 250 ரூபாய் கட்டணத்தில் அனைவருக்கும் 150 ரூபாய் உடனடியாக திருப்பி வழங்கப்பட, மீதி 100 ரூபாய்க்கு டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனை வைத்து பின்னர் திரைப்படத்தை வந்து காணுமாறு ரசிகர்களை போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
மற்ற செய்திகள்