'கழுத்தில் மாங்கல்யம் ஏறும்ன்னு ஆசையோடு இருந்த இளம்பெண்'... 'இந்தா வந்துடுறேன்னு போன புதுமாப்பிள்ளை'... மொத்த குடும்பத்திற்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மெக்கானிக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அவர் பொறியாளராக வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
பின்னர் 26-ந் தேதி (நேற்று) இருவருக்கும் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன. பத்திரிகை அடிக்கப்பட்டு ஊரில் பலருக்கும் கொடுக்கப்பட்டது. திருமணம் நடக்கப்போகிறது என்ற சந்தோசம் மணமகளுக்கும், தங்கள் ஆசை மகளுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் பெண்ணின் பெற்றோரும் இருந்துள்ளார்கள். இதனிடையே நேற்று முன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் மணமகனும் பங்கேற்றார்.
அங்கிருந்த மணமகள் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கொஞ்சம் வெளியே போக வேண்டிய வேலை இருக்கிறது எனக் கூறிவிட்டு மணமகன் வெளியில் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் மணமகன் திரும்பி வரவில்லை. இதனால் திருமண வீட்டில் பதற்றம் உருவானது. அந்த சூழ்நிலையில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று அவர்களைத் தேடி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற மாப்பிள்ளை, திருமணம் பிடிக்காமல் வெளியேறிய தகவல் அப்போது தான் அவர்களுக்குத் தெரிய வந்தது.
தனக்குத் திருமணம் நடக்கப் போகிறது என ஆயிரம் கனவுகளோடு இருந்த மணமகள் அதிர்ச்சியில் உடைந்து போனார். அதே சமயத்தில் இருவீட்டாரிடையே ஒருவித சலசலப்பும் ஏற்பட்டது. மாப்பிள்ளை எதிர்பாராமல் எடுத்த இந்த திடீர் முடிவால் திருமணம் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் முறைப்படி போலீசிடம் புகார் கொடுக்காததால், போலீசாரும் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை. இதனிடையே திருமணம் நின்று போனதற்கான காரணம் பின்னர் தான் தெரிய வந்தது.
மணமகன் ஒருவரைக் காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான் திருமணத்தின் பாதியில் மணமகன் வெளியேறியது பின்னர் தெரியவந்தது. திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது மட்டுமல்லாமல், இரு குடும்பங்கள் இணையும் ஒரு நல்ல நிகழ்வு கூட. இதுபோன்ற அருமையான நிகழ்வில் சொந்த பந்தங்கள் என அனைவரும் இருக்கும் நேரத்தில் மணமகன் எடுத்த இந்த முடிவு அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, கோபத்தையும் வரவழைத்தது.
திருமணம் பிடிக்கவில்லை என்றால் முன்பே கூறி இருக்க வேண்டியது தானே, இப்போது மனதில் ஆசையை வைத்துக் கொண்டு இருந்த அந்த இளம்பெண் என்ன பாவம் செய்தார் எனப் பலரும் தங்களின் கோபத்தை முன்வைத்து விட்டுச் சென்றார்கள்.
மற்ற செய்திகள்