மாண்டஸ் புயல்.. இந்த ஏரியால மழை தட்டி வீசப்போகுது.. தமிழக வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம் என தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன முதல் அதிக கன மழை பெய்யலாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இதனிடையே மாண்டஸ், தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்து வருவதாகவும் புயல் நெருங்கும்போது மழை மற்றும் காற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், மாண்டஸ் புயலானது தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்திருப்பதாகவும் இருப்பினும் கடற்கரையை நெருங்கும்போது தீவிரமாக மாறலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டுள்ள வெதர்மேன், புதுச்சேரிக்கு மேல் உள்ள மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்திருக்கிறார். கனமழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அரசு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்