"10 லட்சம் இல்லைன்னா பரவால்ல.. 2 லட்சமாவது கொடுங்க".. போலி அதிகாரியின் ஜிகினா வேலை.. அதுவும் யார்கிட்ட வேலையை காட்டிருக்காருன்னு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிபோல நடித்து பணம்பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் தரமணியில் உள்ள தலைமை நீர்வளத்துறை அலுவலகத்தில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்னிலையில் அசோகன் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த 23ஆம் தேதி அசோகன் தனது அலுவலகத்தில் இருந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று சொல்லி ஒருவர் அங்கே வந்திருக்கிறார். மேலும் அசோகனிடத்தில் "உங்கள் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் வந்திருக்கிறது" எனக்கூறி "அலுவலகத்தை பரிசோதனை செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கிறார் அந்த நபர். இதனால் அலுவலகமே பரப்பளவு பரபரப்புடன் காணப்பட்டிருக்கிறது.
10 லட்ச ரூபாய்
தொடர்ந்து சத்தமாக பேசி அனைவரையும் அதிரசெய்த அந்த நபர் அசோகனை தனது காரில் ஏற்றிக்கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கேயும் பரிசோதனையில் ஈடுபட்ட அந்த நபர் அசோகன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை விசாரிக்காமல் இருக்க 10 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அசோகன் தனது மனைவியிடத்தில் இது பற்றி சொல்லி இருக்கிறார். மேலும் அசோகனின் சகோதரர் காவல் துறையில் டிஎஸ்பி பதவியில் இருக்கிறார். மனைவி மூலமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் யாரேனும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனரா? என அவரிடம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறார் அசோகன்.
கறார் காட்டிய மேனேஜர்
இதற்கிடையே அசோகனை அழைத்துக் கொண்டு அவரது வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக்கு சென்று இருக்கிறார் அந்த நபர். அங்கே 10 லட்ச ரூபாயை எடுத்து தரும்படி அசோகனிடத்தில் கூறியுள்ளார் அவர். ஆனால் இவர்கள் இருவரும் வங்கிக்கு செல்வதற்கு முன்பே அசோகனின் மனைவி வங்கியின் வேளாளரை அழைத்து தனது கணவருடன் யார் வந்தாலும் பணம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் மர்ம நபருடன் வந்த அசோகனுக்கு பணம் கொடுக்க வங்கி மேலாளர் மறுத்துவிட்டார். அப்போது "10 லட்சம் இல்லையென்றாலும் பரவாயில்லை 2 லட்சம் ஆவது கொடுங்கள்" என அந்த மர்ம நபர் கூற அதற்கு இது ஜாயிண்ட் அக்கவுண்ட் எனவும் அதனால் அவரது மனைவியும் வந்தால் மட்டுமே பணம் எடுக்கமுடியும் எனக்கூறி மேலாளர் மறுத்து விட்டார்.
போன்கால்
இந்நிலையில் ஆலந்தூர் தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் எனக் கூறி அசோகனை காரில் அழைத்துச் சென்று இருக்கிறார் அந்த போலி அதிகாரி. அப்போது அசோகனுக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. அதில் லஞ்ச ஒழிப்புத்துறை பற்றி அசோகன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அந்த நபர் காரை நிறுத்தும்படி சொல்லி "நீங்கள் முன்னால் சென்று கொண்டிருங்கள் நான் பின்னால் வருகிறேன்" என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று இருக்கிறார். இதனை அடுத்து அசோகன் இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த போலி அதிகாரியை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.
கைது
இதன் பலனாக தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த சின்னையன் என்பவரை தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக இவ்வாறு செய்ததாகவும் சின்னையன் காவல்துறையில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். சிறப்பாக செயல்பட்டு போலி அதிகாரியை பிடித்த தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்