‘லண்டன் பொண்ணு’.. வாட்ஸ் அப்பில் வந்த பெண் குரல்.. சென்னை முதியவருக்கு நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை முதியவரிடம் பெண் போல் பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு லண்டனில் இருந்து பேசுவதாக வாட்ஸ் அப்பில் இவா வில்லியம்ஸ் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நீண்ட நாட்கள் தொடர்ந்து செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். அப்போது இவான் வில்லியம்ஸ், சென்னையில் நிலம் வாங்கி இங்கேயே தங்க திட்டமிட்டுள்ளதாக முதியவரிடம் கூறியுள்ளார். அதனால் நிலம் வாங்குவதற்காக தான் சென்னைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பணம்
அதன்படி ஒருநாள் முதியவருக்கு போன் செய்த இவா வில்லியம்ஸ், தான் கொண்டு வந்த 5 கோடி ரூபாய் வரைவோலையுடன் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டதாக கூறியுள்ளார். இந்த வரைவோலையை எந்த வங்கியில் கொடுத்தும் பணமாக்கிக் கொள்ளலாம், அதற்கு 14 லட்சத்து 62 ஆயிரத்து 100 ரூபாய் கலால் வரியாக செலுத்த வேண்டி உள்ளதாக கூறியுள்ளார். இதை செலுத்தினால்தான் தன்னால் சென்னை வர முடியும் என முதியவரிடம் தெரிவித்துள்ளார்.
ஏமார்ந்த முதியவர்
இதை நம்பிய அந்த முதியவர் அப்பெண் கேட்ட தொகையை உடனே ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதன் பிறகும் இவா வில்லியம்ஸிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அந்த முதியவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
டெல்லி சகோதரர்கள்
முதலில் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை சோதனையிட்டனர். பின்னர் அந்த வங்கிக் கணக்கிலிருந்து எந்தெந்த ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து போலீசார் தொடர்ந்து சென்றனர். இதனை அடுத்து டெல்லியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த மஜித் சல்மனி மற்றும் அவரது தம்பி சானு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முதியவரிடம் வாட்ஸ் அப்பில் பெண் போல் பேசியது இவர்கள்தான் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. சில சாப்ட்வேர்களை பயன்படுத்தி பெண் குரல் போல் மாற்றி பேசியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது
இதனை அடுத்து அவர்களிடமிருந்து 4 லேப்டாப், 10 செல்போன்கள், 9 சிம்கார்டுகள், ஒரு Wi-Fi டாங்கில் மற்றும் 51 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த சகோதரர்கள் சென்னையில் முதியவரிடம் பெண் போல் பேசி லட்சக்கணக்கில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்