சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள சிவகாமி நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவரது நண்பர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷின் குழுவின்வருடன் நின்று மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை அந்த ரவுடிகள் தாக்கியுள்ளனர். ஆனால் அவரைத் தாக்கும்போது அங்கு வந்த செந்தில்குமார், தன் நண்பர் தாக்கப்படுவதை தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அந்த கேங்கில் இருந்த அலெக்ஸாண்டர் என்பவர் செந்தில்குமாரை சுட்டுள்ளார். ஆனால் தான் சுடப்பட்டதையே அறியாமல், செந்தில்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் அவரின் சட்டையில் இருந்த ரத்தக் கறையைச் சுட்டிக் காட்டியபோதுதான், யாரோ தன்னைச் சுட்டுள்ளதையே அவர் உணர்ந்துள்ளார்.
ஆனாலும் அந்த ரவுடி கும்பலுடன் பகையை உண்டாக்கிக் கொண்டால் வாழமுடியாது என்று செந்தில்குமார் கமுக்கமாக இருந்துள்ளார். பின்னர் அவருக்கு இடுப்பு வலி அதிகரித்தபோது, மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவருக்குள்ளிருந்த துப்பாக்கிக் குண்டுகள் தெரியவந்தன. இதனை அடுத்து போலீஸார் விரைந்து செந்திலை விசாரித்தனர்.
அப்போதுதான், அந்தத் துப்பாக்கி ரவுடி ரமேஷூடையது என்றும், அவர் அலெக்ஸாண்டர் என்பவரிடம் அந்தத் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு பாத்ரூம் சென்றதும், அந்த கேப்பில் செந்திலின் நண்பர் தாக்கப்பட்டதும், அப்போது அதைத் தடுக்க வந்த செந்திலை சுட்டுவிடுவேன் என அலெக்ஸாண்டர் மிரட்டியதும், ஆனால் அலெக்ஸாண்டர் உண்மையில் செந்திலை சுட்டே விட்டார் என்பதும், அதே சமயம் தான் சுடப்பட்டதே செந்திலுக்குத் தெரியாது என்பதும் தெரியவந்தன.
இதனையடுத்து ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர். செந்திலுக்கு ஆபரேஷன் செய்து மருத்துவர்கள் புல்லட்டினை வெளியில் எடுத்தனர். ஆனால் ரவுடிகளுடன் மோதினால் வாழமுடியாது என்பதால் 9 நாட்கள் புல்லட்டினை தன் உடம்பிலேயே வைத்துக்கொண்டு நடமாடியுள்ளார் செந்தில்குமார் என்பதுதான் இதில் ஆச்சரியம்.