"புலிக்கு வைரஸ்ன்னு கேள்விப்பட்டதும் பயந்துட்டேன்"... "அவனும் எனக்கு புள்ள மாதிரி தான்"... நாய்க்கும் மாஸ்க் அணிந்து 'மாஸ்' காட்டும் 'மனிதர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்லும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இருந்தபோதும் பலர் கொரோனா வைரசின் ஆபத்தை உணராமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு மாஸ்க் அணிந்து கொள்வது மட்டுமில்லாமல் தனது செல்லப்பிராணியான நாய்க்கும் மாஸ்க் அணிவித்து வெளியில் கூட்டிக் கொண்டு வருகிறார். இதுகுறித்து அசோகன் கூறுகையில், 'கடந்த இரண்டரை வருடங்களாக என் ராமுவுடன் (நாயின் பெயர்) தான் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன். என் மீது அவனுக்கு பாசம் அதிகம். எனக்கு அவன் இன்னொரு பிள்ளை மாதிரி' என்றார்.
இதுகுறித்து அசோகன் மேலும் கூறுகையில், 'அப்படி இருக்கையில் தான் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஏதோ ஒரு நாட்டில் புலி ஒன்றிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் ராமுவை நினைத்து பயந்து போனேன். அதனால் அவனுக்கும் மாஸ்க் அணிவித்து வெளியில் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்று விட்டு வீடு திரும்பும் போது அவனுக்கும் சானிடைசர் கொண்டு உடலை சுத்தம் செய்வேன்' என்றார்.
பல பேர் முகக்கவசங்கள் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நிலையில் செல்லப்பிராணிக்கும் மாஸ்க் அணிந்து கூட்டி செல்வது மக்கள் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.