'மச்சான் அப்பா ஜெயிச்சிட்டாரு'... 'துள்ளி குதித்த இளைஞர்'... நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தையின் வெற்றியை கொண்டாடிய மகிழ்ச்சியில் மகன் இறந்த சம்பவம் கடும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், உறவினர்கள் என பலரும் குழுமியிருந்தனர். இதனால் வாக்கு எண்ணும் மையங்கள் விழா கோலம் பூண்டிருந்தன.
இதனிடையே வெற்றி பெற்றவர்களின் எல்லையில்லா மகிழ்ச்சிக்கு இடையே தந்தையின் வெற்றியை கொண்டாடிய மகன் இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஊகாயனூர். இந்த ஊராட்சியில் 5-வது வார்டு வேட்பாளராக பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டார்.
இந்த ஊராட்சியில் பதிவான வாக்குகள் ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. தந்தையின் வெற்றியை தெரிந்து கொள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே அவரது மகன் கார்த்தி (21) தனது நண்பர்களுடன் காத்திருந்தார். இந்நிலையில் அவரது தந்தை போட்டியிட்ட 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான ஓட்டு விபரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன.
முடிவில் வேட்பாளர் சுப்பிரமணியம் மொத்தம் 240 ஓட்டுகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்டவரை விட 18 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை சுப்பிரமணியம், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த தனது மகன் கார்த்தியிடம் தெரிவித்தார். இதனை கேட்ட கார்த்தி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். உடனே தனது தாயாரை தொடர்புகொண்டு தந்தையின் வெற்றி குறித்து தெரிவித்தார்.
அதோடு தனது தந்தை வெற்றி பெற்றதோடு, அவரது ஆதரவு பெற்றவரே ஊராட்சி தலைவராகி உள்ளார் என்ற செய்தி கார்த்தியை இன்னும் உற்சாகத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது. உடனே அங்கிருந்த தனது நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என தந்தையின் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. உற்சாகத்தில் நடனமாடி கொண்டிருந்த கார்த்தி, எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது நண்பர்கள் கார்த்தியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இது அவரது தந்தைக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. தந்தையின் வெற்றியை கொண்டாடிய நேரத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் ஓட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்தது. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.