'அடேய், வேஷம் போட்டாலும் ஒரு நியாயம் வேண்டாமா'... 'வாகனங்களை மடக்கி வசூல்'... வசமாக சிக்கிய இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலீஸ் வேடம் அணிந்து வாகன சோதனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தார்கள்.
மோசடி செய்வதற்காகப் பலரும் பல வேடங்கள் போடுவது உண்டு. அதிலும் சிலர் காவல்துறை அதிகாரி என வேடம் போட்டு மோசடியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஈடுபடும் சிலர் நபர்களைப் பார்க்கும் போது அவர்கள் உண்மையிலேயே காவல்துறை அதிகாரியாக இருக்குமோ என்ற எண்ணம் வருவது உண்டு. ஆனால் இந்த இளைஞர் காவல்துறை அதிகாரி வேடம் போட்டாலும், தான் போட்ட வேடத்தினாலேயே பொதுமக்களிடம் சிக்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் காக்கி சீருடையில் சொகுசு வாகனத்தில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என்று கூறி வாகன சோதனையில் ஈடுபட்டார். தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ஐந்நூறு முதல் ஐந்தாயிரம் வரை அபராதம் என்று கேட்டு உள்ளார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த காக்கி சீருடை மற்றும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவனைச் சுற்றிப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த நபர் வன்னியூர் பகுதியைச் சேர்ந்த பிபின் என்படு தெரிய வந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செக்யூரிட்டியாக வேலைபார்ப்பதற்கான ஐடி கார்டு ஒன்றைக் காண்பித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதுபோன்று வேறு எங்காவது மோசடி செய்துள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்